கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக வதந்தி பரப்பிய வழக்கில் கைதாகியுள்ள திருத்தணிகாச்சலம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருத்தணிகாச்சலம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் ஆண்மைக்குறைவுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரங்கள் செய்த திருத்தணிகாச்சலம் தம்மை தேடி வருபவர்களிடம் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. அதில் நல்ல வருவாய் கிடைக்கவே சித்த மருத்துவர் என போலிச் சான்று தயாரித்ததாக தெரிகிறது.
அதை வைத்து சித்த மருத்துவமனை ஒன்றை தொடங்கிய திருத்தணிகாச்சலம் அங்கு வேலைக்கு வந்த பெண்ணையே மணந்து கொண்டார். சிறிது நாள்களில் மனைவி பிரிந்து சென்றுவிட சித்த மருத்துவராக தொடர்ந்து வலம் வந்துள்ளார் திருத்தணிகாச்சலம். ஆட்டிசம் குறைபாட்டுக்கு சிகிச்சை அளிப்பதாகக்கூறி திருத்தணிகாச்சலம் மோசடி செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுஒருபுறமிருக்க உலகமெங்கும் கொரோனா பாதிப்பு தீவிரமடைய அதற்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகக் கூறத் தொடங்கினார் திருத்தணிகாச்சலம். தமது மனைவிக்கு சித்த மருத்துவம் குறித்து தெரியும் என்பதால் பிரிந்து சென்றவரை மீண்டும் அழைத்த திருத்தணிகாச்சலம் அவர் தெரிவித்த தகவல்களை வைத்து பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.
காவல்துறையினர் கைது செய்து அழைத்து வரும் போது இயல்பாகவே இருந்துள்ளார் திருத்தணிகாச்சலம். தம்மிடம் உள்ள கொரோனா மருந்தை சாப்பிட்டு பார்க்கிறீர்களா என காவல்துறையினரிடம் திருத்தணிகாச்சலம் கேட்டதாக தெரிகிறது. எனினும் அவரிடம் கொரோனாவுக்கான மருந்து ஏதும் இல்லை என்றே காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.