தமிழ்நாடு

திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

webteam

திருத்தணிகாசலத்தின் ஜாமீன் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைதளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டார் திருத்தணிகாசலம். இதனை அடுத்து அவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் புகார் அளித்தார். புகாரை அடுத்து திருத்தணிகாசலம் மே 6ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மனு தொடர்ந்தார்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட காவல்துறை தரப்பு, “கொரோனா பதற்ற நிலையை லாபம் ஈட்டும் நோக்குடன் பயன்படுத்தி உள்ளார். ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும். தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பெற்றதாக கூறும் சான்றிதழ் போலியானது” எனத் தெரிவித்தது.

ஆனால், சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றதாக தான் கூறியதில்லை. பாரம்பரிய முறையில் பயிற்சி பெற்றதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்கிறேன். ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த மூலிகையைத்தான் பரிந்துரைத்தேன் என திருத்தணிகாசலம் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருதரப்பின் விளக்கத்தையும் கேட்ட நீதிபதி, தனது வைத்திய முறைகள் குறித்து எவ்வித தகுதியும் பெறாமலேயே சிகிச்சை அளித்துள்ளார். இவரை ஜாமீனில் விடுவித்தால் இதேபோன்ற மனநிலை கொண்டவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்பதால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தார்