சிவகங்கை லாக் அப் மரணம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

லாக் அப் மரணம் | ’வெறும் 500 ரூபாய் கேட்டதால்தான்..’ - வழக்கறிஞர் vs புகார் அளித்த பெண் சொல்வதென்ன?

இந்நிலையில், அஜித் 500 ரூபாய் கேட்டதற்காக அவர்மீது செல்வாக்கை பயன்படுத்தி திட்டமிட்டு திருட்டு பலி சுமத்தியிருக்கிறார் நிக்கித்தா என்று அஜித் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதனிடையே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அஜித் 500 ரூபாய் கேட்டதற்காக அவர்மீது செல்வாக்கை பயன்படுத்தி திட்டமிட்டு திருட்டு பலி சுமத்தியிருக்கிறார் நிக்கித்தா என்று அஜித் தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மேலும், இது குறித்து அவர் தெரிவிக்கையில், “ இந்த கொலை வழக்கில் நிக்கித்தா என்கிற மருத்துவர் 27 ஆம் தேதி கோவிலுக்கு வருகிறார். அப்போது நடந்த பிரச்னையில் வீல் சார்க்காக வெறும் 500 ரூபாய் கேட்டதால்தான் பிரச்னையே நடந்திருக்கிறது. அஜித் 500 ரூபாய் கேட்டதாகவும் நிக்கித்தா 100 ரூபாய்தான் தருவேன் என்றும் கூறியுள்ளார். இதனால்தான் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான், அஜித்குமார் மீது திட்டமிட்டு 10 பவுன் நகையை காணவில்லை என்று செல்வாக்கை பயன்படுத்தி குற்றம் சுமத்தியிருக்கிறார் நிக்கித்தா.

தலைமை செயலகத்தில் உள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரியின் ஒத்துழைப்போடுதான் அஜித்தை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். நிக்த்தாவின் செல்வாக்கை பயன்படுத்திதான் அஜித் மீது இந்த பலி சுமத்தப்பட்டுள்ளது. அந்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதையும் கண்டுபிடிக்கவேண்டும். ஆக, 500 ரூபாய் கேட்ட இடத்தில் நிக்கித்தா 100 ரூபாய் கொடுத்து சென்றிருக்கிறார். இதனை நிக்கித்தா வீடியோவிலும் தெரிவிக்கிறார்.

எனவே, நிக்கித்தாவின் செல்வாக்கை பயன்படுத்தி அஜித்மீது போடப்பட்ட திட்டமிட்ட பலி இது என்று தெளிவாக தெரியவருகிறது. 27 அன்று அஜித்தை தூக்கிய காவல்துறையினர் 28 மாலைவரையில் அவனை அடித்து அடித்து நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல், எஃப்ஐஆரும் போடாமல் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறார்கள். முதற்கட்ட பிரேதபரிசோதனையில் 18 இடங்களில் காயம். மற்றொரு மருத்துவ அறிக்கையும் சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் மட்டும் 24 லாக் அப் டெத் மரணங்கள் நடந்திருக்கிறது. ” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், முன்னதாக, நகை திருடுபோயுள்ளது என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிக்கித்தா தெரிவிக்கையில், ” கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்தோம். எனது அம்மாவுக்கு ஒரு மாத காலமாக உடல்நலம் சரியில்லை. எனவே, ஸ்கேனுக்காக சென்றபோது நகைகளை கழற்றி எங்களின் பேகில் வைத்து காரின் பின் இருக்கையில் வைத்திருந்தோம். அம்மா திடீரென மடப்புறம் காளியம்மனை பார்த்தபிறகுதான் ஸ்கேன் எடுக்க வருவேன் என்று கூறிவிட்டார். அதனால், மடப்புறம் காளியம்மன் கோயிலுக்கு வந்தோம். அங்கு கோவிலில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சீருடையுடன் நின்றுகொண்டிருந்தார்.

அம்மாவிற்காக வீல் சேர் கேட்டேன். அவரும் அதை கொண்டு வந்து கொடுத்தார். அவரே, காரையும் நானே பார்க் செய்து விடுகிறேன் என்று எங்களிடமிருந்து கார் சாவியையும் வாங்கி விட்டு சென்றுவிட்டார். நாங்கள் கோவிலுக்குள் சென்றுவிட்டோம். பிறகு தாமதமாகதான் அவர் சாவியை கொடுத்தார். அதை வாங்கிவிட்டு, சாப்பிடுவதற்கான ஹோட்டலுக்கு சென்றபோதுதான், நகைகளை போட்டுக்கொள்ளும்படி அம்மாவிடம் கூறியநிலையில், நகையை எடுக்க சென்றேன்.

ஆனால் , பேகில் நகைகள் இல்லை. உடனடியாக அதே கோவிலுக்கு சென்று புகார் அளித்தோம். அதன்பிறகு திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம்.

அஜித் என்கிற பையனை தற்காலிக பணியாளர் என்று கூறினார்கள் நாங்களே அவரை அழைத்து வந்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தோம். கோவிலின் சார்பாகவும் அஜித்தோடு ஒருவர் வந்தார். அஜித் மீது எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. கோவில் நிர்வாகம் சார்பில் அழைத்து விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். வீல் சேர் கொண்டுவதற்காக 500 ரூபாயை என்னிடத்தில் கேட்டு தகராறு செய்தார். நான் 100 ரூபாய் கொடுத்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.