அஜித்குமார் - நவீன் pt
தமிழ்நாடு

காவலர்கள் தாக்கியதால் உடல்நலக்குறைவு.. உயிரிழந்த அஜித்குமார் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி!

சிவகங்கை மாவட்டத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை காவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதை அடுத்து, அவருடைய சகோதரர் நவீனும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

PT WEB

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக பணியாளராக இருந்த அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் தனிப்படை காவலர்களால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அஜித்குமார் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட்ட போது அவரது சகோதரர் நவீனையும் காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாக சகோதரர் நவீன் பேட்டியில் கூறியிருந்தார்.

திருப்புவனம் அஜித் குமார்

இச்சம்பவம் தொடர்பாக கடந்த 2-ம் தேதி முதல் நேற்று வரை நீதிபதி ஜான் சுந்தரேலால் சுரேஷ் திருப்புவனம் பயணியர் மாளிகையில் சாட்சிய விசாரணை மேற்கொண்டு இருந்தார்.

இந்நிலையில் அஜித்குமாரின் சகோதரர் நவீனும் காவலர்கள் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..

காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரர் நவீனும் காவலர்கள் தாக்கியதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு காலில் ஏற்பட்ட வீக்கம், ரத்தக்கட்டு மற்றும் விரல் வலிக்கு சிகிச்சை மற்றும் ஸ்கேன், இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து திருப்புவனம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனிப்படை காவலர்கள் தாக்கியதால் தான் காயம் ஏற்பட்டதாக நவீன் எழுத்துப்பூவமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நவீனின் தாய்மாமா பாலமுருகன் புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், விசாரணையின் போது தனிப்படை காவலர்கள் அடித்ததால் தான் காயம் ஏற்பட்டதாகவும், தற்போது வந்த திருப்புவனம் காவல்துறையினரிடம் நவீன் எழுத்துப்பூர்வமாக அதனை தெரிவித்துள்ளார். கால்களில் வலி ரத்தக்கட்டு இருப்பது போல இருந்தது. ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டுள்ளன என செய்யப்பட்டுள்ளார்.