தமிழ்நாடு

திருப்பரங்குன்றம்: சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி வேல் வாங்கும் விழா

kaleelrahman

திருப்பரங்குன்றத்தில் நாளை நடைபெற இருக்கும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு கந்தசஷ்டி வேல் வாங்கும் விழா நடைபெற்றது.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சந்தசஷ்டி விழாவின் 5ஆம் நாள் நிகழ்ச்சியாக சக்திவேல் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவர்த்தன அம்பிகையிடமிருந்து சண்முகருக்கு சக்திவேல் வழங்கும் விழா நடைபெற்றது.

இதையொட்டி மாலையில் உற்சவர் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்பு சுவாமி அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அதேசமயம் மூலவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணியசுவாமி, கற்பக விநாயகர், பவளக் கனிவாய் பெருமாள், துர்க்கை, சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சூரனை வதம் செய்ய கேவர்தனாம்பிகையிடம் சக்திவேல் வாங்கப்பட்டது. முன்னதாக திருக்கோயில் நம்பிநாயர் பட்டருக்கு பரிவட்டம் கட்டி, கோவர்த்தனாம்பிகையிடம் வேல் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் கோயில் ஸ்தானிகப்பட்டர், சுப்பிரமணிய சுவாமிக்கு நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட சக்திவேல் அளித்து சிறப்பு தீபாராதனை செய்தார். பின்பு சுப்பிரமணியசுவாமி பூ சப்பர அலங்காரத்தில் திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

நாளை சூரசம்ஹாரம் (செவ்வாய்கிழமை) மாலை 6.30 மணிக்கு சூரனை வதம்செய்யும் சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி பக்தர் இன்றி தமிழக அரசின் வழிகாட்டுதலின் படி கோயில் திருவாச்சி மண்டபத்தில் உள் திருவிழாவாக நடைபெறும். இதையடுத்து நாளை மாலை 4 மணிமுதல் இரவு 7 மணிவரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.