ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதன் pt web
தமிழ்நாடு

இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் – ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் அறிவிப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

PT WEB

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று (நவம்பர் 28) மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் என உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தீபம் ஏற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இதையடுத்து, இன்று மதுரை வந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் சார்பில் நீதிபதிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நீதிபதிகளின் பாதுகாப்புக்காக மத்திய பாதுகாப்புப் படையினரும் உடன் வந்திருந்தனர்.

இதற்கிடையே, உச்சநீதிமன்ற உத்தரவை வரவேற்று இந்து மக்கள் கட்சியின் சோலைக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோவில் முன்பு சிவவாத்தியங்கள் இசைத்து ஆடினர். மேலும், இந்து மக்கள் கட்சி சார்பில் 108 பால்குடங்கள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கோவிலுக்குள் இருந்து தீபம் ஏற்றுவதற்குத் தேவையான நெய் உள்ளிட்ட பொருட்களை ஓய்வுபெற்ற நீதிபதிகள் எடுத்துச் சென்றனர். நெய், சூடம் உள்ளிட்ட தீபம் ஏற்றுவதற்கான பொருட்களுடன் அவர்கள் மலைப்பாதை பகுதிக்கு வந்தனர். அங்கும் அவர்களுக்கு பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும் எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் ஓய்வுபெற்ற நீதிபதிகளுடன் மலைப்பாதை பகுதி வரை வந்தார்.

இதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று மாலை தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுவின் மேற்பார்வையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.