தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, இருவருக்குமே தனது ஆதரவு இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்கள் சசிகலாவை ஆதரிக்கிறோம் என கூறுவது தவறு. காங்கிரஸ் கட்சி பன்னீர்செல்வத்தையும் ஆதரிக்கவில்லை, சசிகலாவையும் ஆதரிக்கவில்லை. நாங்கள் அரசியல் சட்டத்தினைத்தான் ஆதரிக்கிறோம். ஆளுநர் அரசியல் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்றார்.
எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அவரது பெரும்பான்மையில் சந்தேகம் இருந்தால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்ல வேண்டும் என திருநாவுகரசர் கூறினார்.
சுப்ரமணிய சுவாமி சசிகலாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கூறுவது, அவரது சொந்த கருத்து, அது பாஜகவின் கருத்து அல்ல என்று அக்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். இது உட்கட்சி விவகாரம். இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதற்கு ஆளுநர் ஒரு முற்றுபுள்ளி வைத்து தாமதபடுத்தாமல் உடனடியாக சரியான முடிவை சொல்ல வேண்டும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.