மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதையடுத்து, இன்று அவர்கள் 4 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இலங்கை முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக, மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே 23-ம் தேதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தியதற்காக, திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டா் சட்டத்தை ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.
திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகிய 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்தானதையடுத்து, அவர்கள் 4 பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர். புழல் சிறையிலிருந்து வெளியில் வந்த அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் திரண்டு மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.