திருமாவளவன் pt
தமிழ்நாடு

திருச்சி கிழக்கில் போட்டியா..? உடைத்து பேசிய திருமாவளவன்!

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவார், தவெக அமைச்சரவையில் இடம்பெறுவார் என விசிக ஆதரவு அளித்ததிலிருந்தே சொல்லப்படுகிறது. இந்தசூழலில் அதுகுறித்த கேள்விக்கு உடைத்து பதிலளித்துள்ளார் திருமாவளவன்.

Rishan Vengai

தவெக தலைமையிலான ஆட்சியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், விசிக எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவை இடம் கிடைத்த சூழலில், திருச்சி கிழக்கில் திருமாவளவன் போட்டியிடுவார், பின்னர் அமைச்சரவை சேர்வார் என்ற யூகங்களுக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனிம்பெருங்கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், இடதுசாரிகள், முஸ்லிம் லீக் மற்றும் விசிகவின் ஆதரவைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடித்தது. இதில் இடதுசாரிகளை தவிர, காங்கிரஸ், முஸ்லிம் லீக் மற்றும் விசிகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.

cm vijay - thirumavalavan

இந்தசூழலில் விசிக தலைவர் திருமாவளவனையும் தவெக தரப்பில் அமைச்சரவையில் இடம்பெற கேட்டுக்கொண்டதாக சொல்லப்பட்டது. திருச்சி கிழக்கில் தவெக சார்பில் திருமாவளவன் போட்டியிடவிருப்பதாகவும், பின்னர் தவெக அமைச்சரவையில் அவர் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திருமாவளவன்.

விடுதலை சிறுத்தையில் கட்சி தலைவர் திருமாவளவன் முகநூல் நேரலையில் பேசினார். அப்போது பேசிய அவர், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுகிறார் என்ற தகவல்கள் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதில் முற்றிலும் உண்மை இல்லை என தெரிவித்தார். 

த.வெ.க அரசுக்கு முதலில் ஆதரவு மட்டும் அளித்தோம், அதன் பின்னர் பத்து நாட்களில் தொடர்ச்சியான விவாதங்கள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கருத்துக்கள் இருந்ததாக தெரிவித்தார். இந்தக் கருத்தை இடதுசாரி கட்சி தலைவர்கள் கூட வலியுறுத்தியதாக தெரிவித்தார். எனவே வரலாற்று சிறப்புமிக்க இந்த தருணத்தில் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என முடிவு எடுத்ததாகவும், அந்த வாய்ப்பு வன்னியரசுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார். 

திருமாவளவன்

இந்த தருணத்தில் இடைத்தேர்தலில் நிற்க விரும்பவில்லை என்றும், எந்த சூழ்நிலையிலும் நான் அமைச்சரவையில் இடம் பெற விரும்பவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு கூட அப்போதே தெரிவித்ததாக கூறினார். 

இடைத் தேர்தலில் நிற்க வேண்டும் என்ற விருப்பம் தனக்கு 100% இல்லை எனவும் தொடர்ந்து விசிக நிலைப்பாடுகள் விமர்சனமாக தான் பேசப்பட்டு வருவதாகவும் ஆதங்கத்தை தெரிவித்தார்.