திருமாவளவன் - மாலதி திருக்குமரன் web
தமிழ்நாடு

தேர்தலில் களம்காணும் திருமாவளவன் சகோதரி மகள்.. முக்கிய தொகுதியில் போட்டி!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி எட்டு தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்துள்ளது . அதில் மாலதி திருக்குமரனும் ஒருவர் .

PT WEB

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு திருமாவளவன் தானே களமிறங்க, கள்ளக்குறிச்சியில் அவரது மறைந்த சகோதரி பானுமதியின் மகள் மாலதி திருக்குமரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குடும்ப, அரசியல் இணைப்பை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கலில் தீவிரம் காட்டிவருகிறார்கள். இந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்து இருந்தார். இதில், 6 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன

Malathi Thirukumaran, Thirumavalavan &Mk Stalin

அதில் சிட்டிங் எம்.எல்.ஏக்களாக உள்ள எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். மேலும் பிற வேட்பாளர் விவரங்களும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், வன்னி அரசு - திண்டிவனம் (தனி) , ஆற்றல் அரசு- பெரியகுளம் (தனி), மாலதி - கள்ளக்குறிச்சி (தனி) , அப்துல் ரகுமான் - பண்ருட்டி, எழில் கரோலின் - அரக்கோணம் (தனி), பன்னீர் தாஸ் - திருப்போரூர் (தனி), சிந்தனைச் செல்வன் - செய்யூர் (தனி) தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மாலதி திருக்குமரன், விசிக தலைவர் திருமாவளவனின் சகோதரியான மறைந்த பானுமதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக இல்லாமல், அமைப்பாக இருந்த காலத்தில் இருந்தே திருமாவளவனுக்குப் பக்கபலமாக இருந்தவர் அவரின் அக்கா பானுமதி. சகோதரி குறித்து திருமாவளவனும் பல இடங்களில் பேசி இருக்கிறார். கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நான் வரும்போது தகவலறிந்து, அங்கே வந்து கும்பல் சூழ பரபரப்பாயிருக்கும் என்னைத் தூரமாய் நின்று பார்த்துவிட்டுப் போய்விடுவார்.

மாலதி திருக்குமரன்

கால் நூற்றாண்டாய் எனக்காக வாழ்ந்த அக்காவை பாதுகாக்கத் தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது என அக்காவின் இறப்பு குறித்து பேசி இருந்தார் திருமா. 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி காய்ச்சல் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பானுமதி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்தான் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் சகோதரியின் மகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார் திருமாவளவன்.