புதுச்சேரியில் நடைபெற்ற விசிக செயற்குழு கூட்டத்தில் திருமாவளவன், திமுக வெற்றிக்கு விசிக வாக்குகளே காரணம் என தரவுகளுடன் விளக்கி, விசிக வாக்குகள் வேறு கட்சிகளுக்கு சென்றதாக பரப்பப்படும் அவதூறுகளை மறுத்தார். திமுக, அதிமுக, பாஜக வாக்கு வங்கிகள் சரிந்துள்ளன என்றும், விசிகயை பலவீனப்படுத்த சில அரசியல் சக்திகள் திட்டமிட்டு செயல்படுகின்றன என்றும் குற்றம்சாட்டினார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில செயற்குழு கூட்டம் கம்பன் கலை அரங்கத்தில் நடைபெற்றது. அதில் விசிக தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மேடையில் பேசிய திருமாவளவன், விசிக-வை திட்டமிட்டு அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. திமுக பல தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு விசிக வாக்குகளே முக்கிய காரணம். அதற்கான தரவுகள் எங்களிடம் உள்ளன. ஆனால் விசிக வாக்குகள் வேறு கட்சிகளுக்கு சென்றுவிட்டதாக சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்.
திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் வாக்கு வங்கிதான் சரிந்துள்ளது. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. தேர்தலுக்கு முன்பும், தேர்தலுக்கு பிறகும் தொடர்ந்து விசிக-வை மட்டுமே குறிவைத்து தாக்குகின்றனர். மூன்று பேரை கட்சியிலிருந்து நீக்கினால் விசிக சிதைந்துவிடும் என்று நினைப்பது தவறான மதிப்பீடு. மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி சிதறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். விசிக நினைத்திருந்தால், தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி சிதறியிருக்கும்.
தலித் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையில் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். விசிக உடைய வேண்டும், சிதைய வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடனே சில அரசியல் சக்திகள் செயல்படுகின்றன. அமைச்சராக்கினால் போதும், வாரியங்கள் அல்லது அரசு பதவிகள் வழங்கக்கூடாது என்ற மனநிலையும் உள்ளது.
தேர்தலுக்கு பிறகு நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சராகியிருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. என்னுடன் பயணித்த ஒருவரை அமைச்சராக்கினேன். நாங்கள் சராசரி அரசியல் செய்வதில்லை. எந்த முடிவையும் கலந்தாலோசித்த பிறகே அறிவிக்கிறோம். எங்களை சாதி அரசியல் செய்யும் கட்சி என்ற பார்வையில் அணுகுவது தவறானது," என்றார்.
மேலும், நீட் தேர்வு குறித்து பேசிய அவர், "காங்கிரஸ் நீட் வேண்டாம் என்று கூறாது; ஏனெனில் அந்தத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ்தான். பாஜகவும் நீட்டை எதிர்க்காது; ஏனெனில் அதனால் அரசியல் பலன் அடைந்து வருகிறது. எனவே, நீட்டை ரத்து செய்வதே அனைவரின் ஒரே இலக்காக இருக்க வேண்டும்," என்றார்.
அரசு நிர்வாக மாற்றங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பி, "அதிகாரிகளை மாற்றினாலோ, அமைச்சர்களை மாற்றினாலோ மட்டும் மாற்றம் ஏற்படாது. தமிழ்நாட்டில் காவல்துறையின் செயல்பாட்டில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது? இன்னும் அம்பேத்கர் சிலை திறப்பு நிகழ்வுகளுக்கே தடைகள் விதிக்கப்படுகின்றன. இதுதானா மாற்றம்?" என்று விமர்சித்தார்.