தமிழ்நாடு

ஏப்.24-இல் தமிழகம் முழுவதும் போராட்டம் : திருமாவளவன்

webteam

பொன்பரப்பி கிராமத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையை சிலர் உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான மோதலில் ஒருவர் தாக்கப்பட்டார். இதனையடுத்து மக்களவைத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பொன்பரப்பி கிராம குடியிருப்பில் புகுந்த மற்றொரு தரப்பினர் அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட ஓட்டுவீடுகளின் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதலில் இருசக்கர வாகனமும் தீக்கிரையாக்கப்பட்ட நிலையில், பெண் உள்பட 5க்கும் மேற்பட்டோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தாக்குதல் தொடர்பாக 25க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் தலைமறைவாக உள்ளதால் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில் பொன்பரப்பி கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து ஏப்ரல் 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளார். மேலும் கொடூரத் தாக்குதல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.