தவெக ஆட்சியைத் தடுக்க திமுக-அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாக வந்த தகவலை முதலில் வதந்தி என திமுக மறுத்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் பேபி, அதிமுக பிளவு அணியின் சி.வி. சண்முகம் தரப்பு, இப்போது விசிக தலைவர் திருமாவளவன் வரை அதே தகவலை உறுதிப்படுத்தியதால், இடதுசாரிகள், ஐயுஎம்எல், விசிக ஆதரவு சூழலில் நடந்த இந்த ரகசிய பேச்சுவார்த்தை குறித்து திமுக என்ன விளக்கம் தரும் என்ற கேள்வி தீவிரமடைந்துள்ளது.
தேர்தலில் தோல்வியடைந்ததால் தவெக ஆட்சி அமைவதை தடுக்க திமுகவும், அதிமுகவும் இணைந்து முயற்சி செய்ததாக தகவல் வெளியாகியது. அது அரசல் புரசல் செய்தி என பேசப்பட்டு வந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி, அது உண்மைதான் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அதிமுகவின் பிளவு அணியில் ஒரு பிரிவான சி.வி.சண்முகம் தரப்பினரும் அதே கருத்தை தெரிவித்தனர். ஆனால், இதை திமுக தரப்பில் மறுத்து வந்தனர்.
இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவனும் இதை உறுதிபடுத்தியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக ஆதரவுடன் அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என விசிகவிடம் வலியுறுத்தப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு இடதுசாரிகளும், விசிகவும் ஒப்புக்கொள்ளாத நிலையில், இரண்டாம் கட்டமாக தன்னை முதலமைச்சராக முன்னிறுத்தி திமுகவும் அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியாகவும் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், தவெக ஆட்சி அமைக்க இடதுசாரி கட்சிகளும், ஐயுஎம்எல் கட்சியும் ஆதரவு தெரிவித்த நிலையில், விசிக ஆதரவு கடிதம் அளிக்கும் கடைசி நிமிடம் வரை தன்னிடம் அந்த திட்டம் முன்மொழியப்பட்டதாக கூறியிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பேபி, அதிமுகவின் சி.வி.சண்முகம் தரப்பு அணியினரைத் தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவனும் கூறியிருப்பதற்கு திமுகவின் பதில் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.