திருமாவளவன் முகநூல்
தமிழ்நாடு

நெற்றியிலிருந்த விபூதியை அழித்தது ஏன்? திருமா விளக்கம்!

விசிக தலைவர் திருமாவளவன் நெற்றியில் வைத்த விபூதியை அழித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு விளக்கமளித்துள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

வரும் சனாதன எதிர்ப்பு மாநாட்டை 2019ஆம் ஆண்டு திருமாவளவன் நடத்தினார். இதனால் திருமாவளவன் இந்துக்களுக்கு எதிரானவர் என்று அவரை இந்து அமைப்புகள் விமர்சனம் செய்து வருகின்றன. அதே சமயம் தான் இந்துக்களுக்கு எதிரானவன் இல்லை, இந்துத்துவத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறேன் என்று திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார்.

இந்தவகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்றைய தினம் மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதேபோல் சிக்கந்தர் அவுலியா பாதுஷா பள்ளி வாசலிதிருமாவளவன் வழிபாடு செய்தார். திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்ற திருமாவளவனுக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது முருகனை தரிசனம் செய்த திருமாவளவன் நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டார். அதன்பிறகு நெற்றியில் திருநீருடன் திருமாவளவன் கோவிலில் இருந்து வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் கோவில் வளாகத்தில் ஒரு தம்பதி, திருமாவளவனை பார்த்து ‛செல்பி' எடுக்க விரும்பினர். இதையடுத்து அவர்களின் செல்போனை வாங்கிய திருமாவளவன் கேமராவில் தனது முகத்தை பார்த்து நெற்றியில் இருந்த திருநீரை கையால் அழித்தார். அதன்பிறகு அவர் தம்பதியுடன் சேர்ந்து ‛செல்பி' எடுத்துவிட்டு செல்போனை அவர்களிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றார்.

திருமாவளவன் நெற்றியிலிருந்த திருநீறை அழித்த வீடியோ வைரலான நிலையில், அவரது இந்த நடவடிக்கைக்கு எதிராக பலர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில்,இதுகுறித்து விளக்கமளித்துள்ள திருமாவளன், “திருநீறை நெற்றியில் வைத்துக்கொண்டுதான் வெளியில் வந்தேன். சுமார் அரை மணி நேரம் வரை திருநீறு வைத்திருந்தேன். அவ்வளவு நேரம் இருந்ததை நீங்கள் யாரும் பார்க்கவில்லையா? நாள் முழுவதும் திருநீறை நான் வைத்துக்கொண்டு இருக்க முடியுமா? ” என்று கேட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தவே முருகன் பெயரில் மாநாட்டை நடத்துகிறார்கள். மாநாட்டின் நோக்கம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டே இருப்போம். தமிழிலும் குடமுழுக்கு என்பதை அதற்கான முதல் கட்டமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழில் தான் குடமுழுக்கு என்ற நிலை ஒருநாள் வரும்” என்று தெரிவித்துள்ளார்.