திருமாவளவன், அமித் ஷா pt web
தமிழ்நாடு

அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்.. அதிமுகவைக் கடுமையாக விமர்சித்த திருமாவளவன்!

”அதிமுகவின் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவரை எந்த துணிச்சலில் டெல்லியில் பாஜக தலைவர்கள் சந்திக்கிறார்கள்” என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

PT WEB

அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மூத்த தலைவர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், அவர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்து, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசினேன் எனக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ’’அதிமுகவில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவரை எந்த துணிச்சலில் டெல்லியில் பாஜக தலைவர்கள் சந்திக்கிறார்கள்’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ”செங்கோட்டையன் பின்னால் பாஜக இருப்பதை டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து, அவர் உறுதிப்படுத்தி உள்ளார். அதிமுகவைக் கூட்டணியில் இணைத்துக்கொண்டே கபளீகரம் செய்யும் முயற்சியில பாஜக ஈடுபடுவதை ஏற்கெனவே சுட்டிக் காட்டினோம். எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக தலைவர்களுக்கு என்மீது கோபம் வந்தது. அதிமுகவை தனியாக போகவிடாமல் கூட்டணியில் இணைத்தாலும் தனித்துச் செயல்படவிடாமல் அதைச் சிதைக்கின்ற கபளீகரம் செய்யும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுவதை அதிமுக தொண்டர்கள் உணரத் தொடங்கி இருப்பார்கள்.

ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன்

எடப்பாடி பழனிசாமியால் நீக்கம் செய்யப்பட்ட ஒருவரை, அமித் ஷா, நிர்மலா சீத்தாராமன் என்ன துணிச்சலில் சந்தித்தார்கள் என்று கேள்வி எழுகிறது. அதிமுக-வை அதன் தலைவர் என்ன மதிப்பீடு செய்து இருக்கிறார்கள், அதிமுக-வை எப்படி நடத்துகிறார் என்பதை நாட்டு மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலும் பாஜகவுடன்தான் கூட்டணி என அதிமுக இருந்தால் தொண்டர்களே பதில் சொல்வார்கள்” என கூறினார்.

”விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்தல் ஏற்புடையதல்ல!”

தொடர்ந்து, ”விஜயின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கிடைக்கமால் இருக்கிறது” என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ”விஜய் சுற்றுப்பயணம் செல்ல அனுமதி மறுத்திருந்தால் அது ஏற்புடையதல்ல. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு. அந்த வகையில், விஜய் சுற்றுப்பயணம் செல்ல அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அமைதி மறுப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதன் பின்னர் உரிய பதில் சொல்கிறேன்” எனப் பதிலளித்தார்.

விஜய் - திருமா

”விசிகவின் சுற்றுப்பயணம் எப்போது தொடங்கும்” என்ற கேள்விக்கு, ”விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிம் மறுசீரமைப்பில் கவனம் செலுத்துகிறோம். 22 ஆயிரம் பேர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள். 234 தொகுதிகளுக்கு மாவட்டச் செயலாளர் அறிவிக்கப்படும். அதன் பின்னர்தான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் குறித்து திட்டமிட முடியும். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் சுற்றுப்பயணத்திற்கு இப்போதே திட்டமிட்டு உள்ளனர். உடனடியாக களத்தில் இறங்க வேண்டும் என்று அவசியமில்லை. கட்டாயம் இல்லை. கட்சியின் கட்டமைப்பை உறுதி செய்து பின் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு உள்ளோம்” எனத் தெரித்தார்.