கரூரில் நேற்று நடைப்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கரூருக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் திருச்சி விமான முனையம் வந்தடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் காரில் சாலை மார்க்கமாக கரூர் புறப்பட்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , “7 மணி நேரம் வந்து சேர வேண்டிய இடத்துக்கு உரிய நேரத்தில் விஜய் வரவில்லை. சென்னையில் இருந்து புறப்பட்ட நேரமே தாமதம். அந்த பயணத்தின்போது கூட்டம் கூடுவது என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் அதற்கான வகையில் திட்டமிட்டு இருக்க வேண்டும். 7 மணி நேரம் தாமதமாவது என்பது அவர்களே திட்டமிட்டு தாமதித்து போனார்களா? அல்லது எதேச்சையாக நடந்ததா? என்ற கேள்வி எழுகிறது.
ஒரே இடத்தில் மக்கள் தேங்கி நின்றால் மூச்சு திணறல் ஏற்படும். நகராமல் தேங்கி நின்றதால் மூச்சு திணறல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கூட்டங்களில் பங்கேற்க செல்பவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தை இதோடு ஒப்பீடு செய்யக்கூடாது. அந்த சம்பவம் வேறு இந்த சம்பவம் வேறு. தலைவரை பார்க்க செல்லும் விஜய் ரசிகர்கள் முதலில் அவர்களின் பாதுகாப்பில் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.