அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக தலைவர் விஜயுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி, கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திருமாவளவன், செங்கோட்டையனின் முடிவுக்கு பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் தாக்கம் இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளார். இது அதிமுகக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் பின்னடைவு என அவர் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் எம்எல்ஏ-வாக இருந்த செங்கோட்டையன், அண்மையில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் திமுக அல்லது தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில்,சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயின் வீட்டிற்கு, செங்கோட்டையன் சென்றார். சுமார் 2 மணி நேரம் விஜயுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. தமது அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துள்ள செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து வெளியேற்றியது, அக்கட்சிக்கும், எடப்பாடி கே பழனிசாமிக்கும் பின்னடைவு என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையனின் முடிவுக்கு பின்னால் பாஜக, ஆர்எஸ்எஸ் இருப்பதாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசுகையில், ”செங்கோட்டையன் அதிமுகவில் மூத்ததலைவர், அவருக்கு நெடிய அனுபவம் உள்ளது. அவரை அதிமுகவிலிருந்து வெளியேற்றியது எடப்பாடி பழனிச்சாமிக்கும் அதிமுகவிற்கும் பின்னடைவாகத்தான் இருக்கும். தனிப்பட்ட முறையில் தன்னிச்சையாக செங்கோட்டையன் இந்த முடிவை எடுத்திருந்தால் அதில் எந்த கருத்தையும் சொல்வதற்கு இல்லை. ஆனால் இதன் பின்னணியில் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய அமைப்புகளின் கைகளும் நீண்டிருக்குமா? என்ற கேள்வி வருகிறது. ஏற்கனவே அவர் பாஜகவினர் தான் என்னை டெல்லிக்கு அழைத்தார்கள் என ஒப்புதல் வாக்குமூலம் கூறியிருக்கிறார்.
அதிமுகவை பலவீனப்படுத்துவதை ஒரு செயல் திட்டமாக பாஜக செயல்படுத்தி வருகிறது அது அதிமுகவிற்கும் நல்லதல்ல தமிழ்நாட்டுக்கும் நல்லதல்ல அதிமுக அதைப்பற்றி சிந்தித்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்..ெங்க்