திருமாவளவன் பரப்புரை Pt web
தமிழ்நாடு

”உருட்டல், மிரட்டலை பாஜக கையாள்கிறது; தவெகவால் மக்களை ஏமாற்ற முடியாது” - திருமாவளவன்!

திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பி செந்தில்குமாரை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

Premkumar S

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் தான் போட்டியிடப்போவதாக திருமாவளவன் அறிவித்திருந்தார். எனினும், வேட்புமனுதாக்கலுக்கு 2 நாட்களே இருந்த சூழலில், தனது முடிவை மாற்றிக் கொண்ட அவர் அத்தொகுதிக்கான மாற்று வேட்பாளரையும் அறிவித்தார். இதையடுத்து, திமுகவின் அழுத்தத்தின் காரணமாகவே கடைசி நேரத்தில் திருமாவளவன் பின்வாங்கியிருக்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

கடலூர் பொதுக்கூட்டம்

இச்சூழலில், நேற்று கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, இன்று திண்டுக்கல் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஐ.பி. செந்தில்குமாரை ஆதரித்து இன்று பரப்புரை செய்கிறேன். அதேபோல, ஏப்ரல் 21-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்புரையில் ஈடுபடவிருக்கிறேன் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியை எதிர்த்து நிற்கிற கட்சிகள் கூட்டணி பலமில்லாமல் களத்தில் உள்ளன. 23 கட்சிகளைக் கொண்ட ஒரு பெரிய கொள்கை பிடிப்புள்ள கூட்டணியாக திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி உள்ளது. அதிமுகவிற்கு விரக்தி ஏற்பட்டிருக்கிறது. முதலில் அவர்களுக்குக் கூட்டணி பலம் இல்லை. அவர்கள் கூட்டணியை நியாயப்படுத்தவும் முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

கே. பழனிசாமி, பிரேமலதா

தேமுதிக-வை அதிமுக கூட்டணியில் இணைப்பதற்குப் பெரும் முயற்சியை மேற்கொண்டார்கள். அது வெற்றி பெறவில்லை. திமுக கூட்டணியில் சேர்ந்துவிட்டார்கள் என்கிற ஏமாற்றம், விரக்தி, அதனால் எழுந்துள்ள ஆத்திரம் அப்படி அவர்களைப் பேச வைக்கிறது. தேர்தல் களத்தில் கூட உருட்டல், மிரட்டல் அல்லது ஒரு பிளாக்மெயில் என்கிற அணுகுமுறையை பாஜகவினர் கையாண்டு வருகிறார்கள். இவற்றைத் தமிழ்நாட்டு மக்கள் அமைதியாகக் கவனித்து வருகிறார்கள். 23-ஆம் தேதி அதற்கான தீர்ப்பை எழுதுவார்கள்” எனத் தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜயின் தேர்தல் பரப்புரைக்கு காவல்துறை தொடர்ந்து அனுமதி மறுப்பது குறித்த கேள்விக்கு, தற்போது பரப்புரைகளுக்கு அனுமதி வழங்குகிற அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டு அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால், தேர்தல் ஆணையம் அவர்களை வழிநடத்துகிறது. எனவே, விஜய் பரப்புரை செய்வதற்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது என்றால், அதற்கு திமுக அரசு அல்லது திமுக அமைச்சர்கள் யாரும் காரணமாக இருக்க முடியாது. வேண்டுமென்றே திமுக-வுக்கு எதிராக அதைத் திருப்பப் பார்க்கிறார்கள். மக்கள் அரசியல் அறியாதவர்கள் இல்லை, மக்களை அவர்களால் ஏமாற்ற முடியாது என தெரிவித்தார்