thirumavalavan pt
தமிழ்நாடு

“கூட்டணி முறிவுக்கு 100% திமுகவே காரணம்..” திருமாவளவன் குற்றச்சாட்டு!

திமுக கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறியதற்கு திமுகவே காரணம் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.

Rishan Vengai

2026 தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகிய விசிக, தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சர்பொறுப்பு ஏற்றது குறித்து கடும் சர்ச்சை எழுந்தது. கூட்டணியை உடைத்ததற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம் என திருமாவளவன் குற்றஞ்சாட்டி, கூட்டணி கட்சிகளின் நட்பை பேணத் தவறியது திமுக தான் என்றும், மதச்சார்பற்ற கூட்டணியின் ஆன்மாவை அவர்கள் காக்கவில்லை என்றும் வலியுறுத்தினார்.

2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு திமுக கூட்டணியிலிருந்து விலகிய விடுதலை சிறுத்தைகள், தவெக கூட்டணியில் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு திமுகவின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருவதோடு விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள்.

திருமாவளவன்

இந்தசூழலில் தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு திமுகவே காரணம் என்றும், கூட்டணி கட்சிகளோடு நட்போடும், நல்லிணக்கத்தோடும் திமுக செயல்படவில்லை என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தர்மபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், "2024 நாடாளுமன்ற தேர்தலின்போதே திமுக கூட்டணியிலிருந்து விசிகவை வெளியேற்ற பல வெளிப்புற அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அப்போது முக ஸ்டாலினை நேரில் சந்தித்து இந்தக் கூட்டணியை உடைப்பதற்கு ஒருபோதும் நான் இடம் கொடுக்க மாட்டேன் என்று உறுதிப்படுத்தினேன். அதிமுக எங்களை கூட்டணிக்குள் இழுக்க பலமுறை முயற்சி செய்தது. அதற்காக விசிகவை டார்கெட் செய்து பிரச்சாரம் செய்தார்கள். மதச்சார்பற்ற கூட்டணி உடைந்ததற்கு விசிக காரணம் என்ற வரலாற்று பழியை சுமக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். இதெல்லாம் தற்போது விசிகவை விமர்சிக்கும் கும்பலுக்கு தெரியாது.

விசிகவின் அங்கமாக இருந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளவன் முதலமைச்சர் என்ற பிரச்சாரத்தை 234 தொகுதிகளிலும் தொடங்கவேண்டும், மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை உள்ளது, கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு வளர்க்கவேண்டும், கூட்டணியிலிருந்து விலகி முதலமைச்சர் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் வெளிப்படையாக பேசினார். அப்போது திருமாவளவன் முதலைமச்சர் என்பது ஒருபக்கம் இருக்கட்டும், பாஜக, ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டிற்குள் எப்படியாவது காலடி வைத்துவிட வேண்டும் என துடித்துகொண்டிருக்கும் வேளையில் திமுக உடனான கட்டுக்கோப்பான கூட்டணியை உடைத்து அவர்கள் காலூன்ற வழி செய்துவிட கூடாது, அதனால் இதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறினேன். இன்றைக்கு அவதூறுகளை அள்ளி வீசுகிற கும்பலுக்கு இதெல்லாம் தெரியாது.

திருமாவளவன்

தேர்தல் முடிவு வெளிவந்தபிறகு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை நாம் எடுத்தோமா, இன்று நான் சொல்கிறேன் எங்களை கூட்டணிக்குள் வைத்திருக்கவேண்டும், இந்தகூட்டணியை நீட்டிக்க வேண்டும் என்ற முயற்சியை திமுகவால் எடுக்கமுடியவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மை. இதைப்பற்றி ஏன் யாரும் பேசவில்லை. திடீரென ஒருகட்சியை கூட்டணிக்குள் எடுத்துவந்துவிட்டு, ஏற்கனவே கூட்டணியிலிருந்த கட்சிகளை பற்றி கவலைப்படாமல் எண்ணிக்கையை குறைத்து, புதிய கட்சிக்கு எண்ணிக்கையை அதிகமாக கொடுத்தார்கள். இதெல்லாம் ஏற்கனவே கூட்டணியிலிருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்ததா? இதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டும். அதை யாருமே விமர்சிக்கவில்லை. கூட்டணி உறவை பேணிப்பாதுகாக்கின்ற பொறுப்பு தலைமை தாங்குகின்ற கட்சிக்கு தான் உண்டு. கூட்டணி கட்சிகளின் நட்பை திமுக பேணிக்காக்கவில்லை.

காங்கிரஸ், இடதுசாரிகள் எல்லாம் போனபிறகு தான் விடுதலை சிறுத்தைகள் போனது. அப்போதும் அமைச்சரவைய்ல் இடம்பிடிக்க மாட்டோம் என திருமாவளவன் அறிவித்தது உண்மையா இல்லையா. பதவி ஆசை இருந்திருந்தால், காங்கிரஸ் போனபோதே நான் போயிருக்க முடியாதா? பதவி ஆசை இருந்திருந்தால், முதலமைச்சர் விஜய் தொடர்புகொண்டு பேசியபோதே நான் இசைந்து கொடுத்திருக்க முடியாதா? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நில்லுங்கள் என்று கூறியபோது இசைந்திருக்க முடியாதா? அமைச்சராகுங்கள் என்று கூறியபோது நான் அதை ஏற்றுக்கொண்டிருக்க முடியாதா? இடைத்தேர்தலில் நிற்க மாட்டேன். அமைச்சர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்று தொடக்கத்தில் இருந்தே மறுத்தலித்தவன் திருமாவளவன். பிறகு, ஏன் 10 நாட்களுக்குப் பிறகு அந்த முடிவு? என்று கேட்கலாம்; நான் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறவன் என்று காட்டிக்கொள்வதற்காக, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவரின் அமைச்சராகும் வாய்ப்பைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்று என் ஆழ்மனம் சொன்னது.

எளியவர் ஒருவர் அமைச்சரானதை பெரியார் வழிவந்த திராவிட இயக்கங்கள் தானே முதலில் பாராட்டியிருக்க வேண்டும். ஆனால் விசிக தலைமையை தொடர்ந்து குறிவைத்து அவர் அதற்காக அப்படி போய்விட்டார், திருமாவளவன் நீர்த்து போய்விட்டார் என்று தானே தாக்குதல் நடத்தினீர்கள். இந்தமுடிவை எடுக்கும் கடைசி நிமிடம் வரை உங்களுடைய வீட்டில் தானே இருந்தோம், இந்தமுடிவை எடுக்கும் இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என சொன்னப்போது வாழ்த்துக்கள் சொன்னீர்களே. ஆனால் தற்போது விசிகவின் கூடாரம் காலியாகிவிட்டது, எல்லாரும் விஜய்க்கு பின்னால் போய்விட்டார்கள் என விமர்சிக்கிறார்கள்.

உளுந்தூர்ப் பேட்டை மாநாடு விசிக கட்சி எப்படி என்று உலகத்திற்கே பறைசாற்றியது; தமிழ்நாடே நடுங்கும் அளவிற்கு குவிந்தார்கள். வந்தது வெறும் 25 சதவீதம் தான், 75 சதவீதம் வரவேயில்லை. விசிக GEN Z தலைமுறையினருக்கான கட்சியாக வளர்ந்துள்ளது.

இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளை திமுக கையாண்ட விதம்தான் தவறு என எந்த நியாயஸ்தர்களும் பேசவில்லை. 100 சதவீதம் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு திமுக தான் காரணம்.

வெற்றிக் கூட்டணி… அந்தக் கூட்டணி… இந்தக் கூட்டணி… என என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால், அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இருக்க வேண்டும் என்ற குரலை உயர்த்திச் சொன்னவன் திருமாவளவன்; ஏனென்றால் மதச்சார்பற்ற என்று போட்டால் தான் மைனஸ் பாஜக, ஆர்எஸ்எஸ் என்று வரும். மதச்சார்பற்ற சமூக நீதி கூட்டணி இப்படித்தான் உருவானது. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் விடுதலை சிறுத்தை சொந்தங்களே, யார் விமர்சித்தாலும் எதிர்வினை ஆற்றவேண்டாம்” என்று பேசினார்.