தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும் கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற ஸ்தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.
இந்த கோயிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது. அதன் பிறகு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இதற்கிடையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரூபாய் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பெருந்திட்டவளாக பணிகள் நடந்தன. இதில் பல்வேறு திட்டப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து குடமுழுக்கு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தது.
இந்த நிலையில் ஜூலை ஏழாம் தேதியான இன்றைய தினம் குடமுழுக்குவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விரைந்து நடந்தது. குறிப்பாக கோவிலின் மேற்கு கோபுரத்தின் அருகே கடந்த 40 நாட்களுக்கு முன்பு யாகசாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. சுமார் 8000 சதுர அடியில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட யாகசாலை பக்தர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டது.
கடந்த ஒன்றாம் தேதி முதல் குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தினமும் காலையிலும் மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடந்தது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தது. மேலும் பக்தர்களின் பாதுகாப்புக்கான வசதிகளை காவல்துறையினர் செய்திருந்தனர். இதற்காக சுமார் 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான குடமுழுக்கு விழா இன்று வெகு விமர்சையாக நடந்தது. இதற்காக அதிகாலை 4 மணி அளவில் யாகசாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து தீபாராதனையும் பூர்ணாகுதியும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க கடம் புறப்பாடு தொடங்கியது.
கோவிலை சுற்றி வந்த கடத்திற்க்கு பின்னால் மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என கோஷமிட்டபடி பின்தொடர்ந்து வந்தனர். தொடர்ந்து ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்படும் கடம் கோவிலின் மேற்கு வாசல் வழியாக அமைக்கப்பட்ட தற்காலிக பாதை மூலம் ராஜகோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள 9 கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து அதிகாலை சரியாக 6.50 மணிக்கு 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது கலந்து கொண்ட பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, கடம்பனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா வேலனுக்கு ஆரோகரா’ என கோஷமிட்டது விண்ணை பிளக்கும் அளவிற்கு இருந்தது.
குடமுழுக்கு விழா நிறைவடைந்ததும் பக்தர்கள் இருந்த கடற்கரை பகுதியில் 20ராட்சத ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கும் நிகழ்வு நடந்தது. இதில் தலா 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒவ்வொரு ட்ரோன் மூலம் மூன்று முறை பக்தர்கள்மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. குடமுழுக்கு விழா நிறைவு பெற்றதும் பக்தர்கள் காவல்துறை மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள பாதை வழியாக தங்களது சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றனர். 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிழா என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குடமுழுக்கு விழாவை குடும்பத்துடன் கண்குளிர பார்த்து மகிழ்ந்தனர்.