திருச்செந்தூர் உடன்குடி பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை என நடிகர் ஜி.பி.முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். ஊர் மக்களையும், கோயிலையும் ஜி.பி. முத்து அவதூறாக பேசியதாகக் கூறி, அவரது வீட்டை மக்கள் முற்றுகையிட்டனர்.
வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக்கொள்ளுமாறு காவல் துறை கூறியதையடுத்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வட்டாட்சியர் பாலசுந்தரம் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. அப்போது தனது வீட்டிற்கு செல்லும் பாதையை பெற்றுத்தர வேண்டும் என்று ஜிபி முத்து கோரிக்கை வைத்தார்.
இதை விசாரித்த அதிகாரிகள் ஜிபி முத்துவின் வீட்டிற்கு செல்லும் பாதையை சரி செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நத்தம் இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதோ, கட்டுமானங்கள் ஏற்படுத்துவதோ கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் கோயிலை கட்டிக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.
இரு தரப்பினர் இடையே இனி வரும் காலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது. மீறி வந்தால் அரசு விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஒப்புக்கொண்ட இரு தரப்பினரும் எழுதி கொடுத்து கையொப்பம் இட்டனர். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னை இன்று முடிவடைந்துள்ளது.