தமிழ்நாடு

திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை

Rasus

வேலூர் சிறையிலிருந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலையானார்.

கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட திருமுருகன் காந்தி, அதில் அரசுக்கு எதிரான கருத்துக‌ளை பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிந்த நிலையில், திருமுருகன் காந்தி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனிடையே ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பேசிய திருமுருகன் காந்தி விமானம் மூலம் பெங்களூரு வந்து இறங்கிய போது கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 52 நாட்களுக்கு பின் ஜாமீனில் இன்று வெளிவந்துள்ளார். பல்வேறு வழக்குகளில் எழும்பூர் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றம் திருமுருகன் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் அவர் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார். முன்னதாக திருமுருகன் காந்தி சிறையில் தனிமைப்படுத்தப்பட்டதாக புகார் ஒன்றும் எழுந்தது. சிறையில் அவருக்கு உடல்நிலை மோசமான காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.