தமிழ்நாடு

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் திலகவதியின் மருமகள் ஸ்ருதி கைது ! - என்ன காரணம்?

webteam

ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதியின் மருமகளை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திலகவதியின் மகனான மருத்துவர் பிரபு திலக், கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்கறிஞர் ஸ்ருதியை திருமணம் செய்தார். இந்நிலையில் கடந்த அக்டோபர் 29-ம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தன் தந்தையுடன் வந்த ஸ்ருதி குடும்பத் தகராறு காரணமாக கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், 170 சவரன் நகைகளை பிடுங்கி வைத்துள்ளதாகவும், மாமியாரும் இதற்கு உடந்தை என்றும் புகார் அளித்தார்.

இந்நிலையில் இன்று கே.கே.நகரில் உள்ள பொன்னம்பலம் காலனியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஸ்ருதியை திருமங்கலம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காரணங்கள் எதையும் தெரிவிக்காமல், உடல்நலமின்றியிருக்கும் வழக்கறிஞர் ஸ்ருதியை அத்துமீறி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கைது செய்திருப்பதாக ஸ்ருதியின் நண்பரும் வழக்கறிஞருமான ப்ரியா குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் இதில் தலையிட வேண்டும் எனவும், திலகவதியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய செயல்கள் நடைபெறுவதாகவும் புகார் கொடுத்துள்ளார்.