Accused
Accused pt desk
தமிழ்நாடு

மூதாட்டிகளை குறிவைத்து நூதன திருட்டு – சிறையிலிருந்து வெளிவந்த 4 நாட்களில் மீண்டும் சிக்கிய திருடன்

webteam

செய்தியாளர்: அன்பரசன்

சென்னை ராயப்பேட்டை சர்தார்ஜங் கார்டன் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி சூர்யா (68). நேற்று இவர், தனது வீட்டருகே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் வீடு வீடாக பால் போடும் வேலை செய்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டதுடன் காலில் விழுந்து தன்னை ஆசிர்வாதம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Jewel

இதையடுத்து மூதாட்டி சூர்யா, அவருக்கு ஆசிர்வாதம் செய்த பின்பு அந்த நபர் பேச்சு கொடுத்து மூதாட்டியை பீட்டர் சாலை வரை அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு கடை முன்பு வைத்து தனது கையில் இருந்த பச்சை கல் மோதிரத்தை காண்பித்துள்ளார். தொடர்ந்து அந்த மூதாட்டியிடம் “விலை உயர்ந்த இந்த கல் போன்று என்னிடம் வேறும் உள்ளது. உங்களுடைய நகைகளை கழட்டி கொடுத்தால் அதற்கு பதிலாக இருமடங்கு மதிப்புள்ள இந்த பச்சை கல்லை கொடுக்கிறேன்” என பேசிக்கொண்டுள்ளார்.

அப்போது மூதாட்டி சில நொடிகள் சுயநினைவை இழந்த நிலையில், அந்த நபர், மூதாட்டி சூர்யா அணிந்திருந்த தங்க செயின், கம்பல் என 7 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். நினைவுதிரும்பியபின் பாதிக்கப்பட்ட மூதாட்டி சூர்யா, இது குறித்து அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

Arrested

போலீசார் நடத்திய விசாரணையில் மேடவாக்கம் பகுதியை சேர்ந்த திருமலை (45) என்ற நபர்தான் திருட்டில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து திருமலையை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 6 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட திருமலை மீது ஏற்கனவே 12க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் உள்ளதும், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்புதான் கோடம்பாக்கம் போலீசாரால் இதே போன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் வெளியே வந்ததும் தெரியவந்தது.

இவர், இதே போல் நேற்று காலை சென்னை புதுப்பேட்டை வேலாயுதம் தெரு வழியாக மார்கெட்டிற்கு நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ரமணியிடமும் தன்னுடைய மகனுக்கு சுன்னத் நிகழ்ச்சி நடைபெறுகிறது எனவும், வீட்டு நிகழ்ச்சிக்கு வந்து ஆசிர்வாதம் செய்தால் பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணம் தருவதாகவும் கூறி 2 சவரன் நகை மற்றும் 1500 ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து திருமலையை கைது செய்த போலீசார், விசாரணைக்குப் பிறகு அவரை சிறையில் அடைத்தனர்.