சென்னையில் அனல் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று 7 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. சேலத்தில் 103 டிகிரியும், வேலூர் மற்றும் மதுரையில் 102.5 டிகிரியும், கரூரில் 102 டிகிரியும், தருமபுரி, திருச்சியில் 101 டிகிரியும் பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 98 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் அனல் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் கடலோர மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அனல் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் வறண்ட நிலையில் காணப்படும் எனவும் அதிகட்சமாக 36 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸும் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.