தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடியும் வரை மின்தடை என்பது இருக்காது என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் அறிவிக்கப்படும் மின்தடைக்கான அனுமதி ஒத்திவைக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின்தடை என்பது இருக்காது. பராமரிப்பு பணிக்காக அறிவிக்கப்படும் மின்தடைக்கான அனுமதி அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன. ஊராடங்கினால் பெரும்பாலான மக்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதாலும், மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதாலும் அவர்களது நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தளர்வுகள் நிறைவுற்ற பிறகு பராமரிப்பு பணிகள் தொடங்கும்” என தெரிவித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.