இன்று இரவு முதல் நாளை (நவம்பர் 11) காலை வரை கனமழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “தெற்கு வங்கக் கடலில் மத்தியப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே நாளை (நவம்பர் 11) மாலை புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும். ஒரு சில இடங்களில் அதிக கனமழையும் பெய்ய கூடும். புதுச்சேரி மற்றும் கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு குறைந்திருக்கிறது. இந்த நேரத்தில் கரையோர பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று இருக்கக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகி விடும்” என்றார்.
அதிகபட்சமாக எண்ணூரில் 5 சென்டி மீட்டர் மழை இன்று காலை 8.30 மணி முதல் மாலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில் வடசென்னை - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல். நாளை பிற்பகல் வரை கனமழை நீடிக்கும். கரையை கடக்கும் போது 50 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.