தமிழ்நாடு

பத்து தலைமுறையாக பாதை இல்லை: சடலத்தை விளைநிலம் வழியாக தூக்கிச் செல்லும் அவலம்

kaleelrahman

மதுராந்தகம் அருகே சின்ன வெண்மணி கிராமத்தில். பத்து தலைமுறையாக இடுகாட்டுக்குச் செல்ல பொதுவழி இல்லாமல் நெற்பயிர் விளைநிலம் வழியாக சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம் தொடர்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன வெண்மணி ஊராட்சியில் உள்ள காலனி பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதிக்கான இடுகாடு அக்கிராமத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இறந்தவர்களின் உடலை இடுகாடுக்கு கொண்டு செல்ல பொதுப்பாதை இல்லை. கடந்த பத்து தலை முறைக்கும் மேலாக இடுகாட்டிற்கு வழிப்பாதை ஏற்படுத்தப்படவில்லை. இதனால் இந்த காலனி பகுதியில் வசிக்கும் யாரேனும் இறக்கும் பட்சத்தில் இறந்தவரின் உடலை, தனி நபர்கள் விளைநிலங்களின் வழியாக பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து இடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் சுடுகாட்டிற்கு நிரந்தர பாதை அமைத்துத்தரக்கோரி பல ஆண்டுகாலமாக இப்பகுதி மக்கள் போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இன்று வரையில் அப்பகுதி மக்களின் அவலநிலை தொடர்ந்து வருகிறது. எனவே தமிழக அரசு தனி கவனம் செலுத்தி இப்பகுதி மக்களுக்கு சுடுகாடு வழிப்பாதை ஏற்படுத்தித் தர முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.