டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கவியரசு கண்ணதாசனின் 95 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக அரசு சார்பில் மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை கோட்டூபுரத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்குப் பிறகு அவர் நலம்பெற்றும் பணிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த செவிலியருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு பரிசோதனையில் நெகடிவ் வந்துள்ளதாகவும், எனவே டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்தார். மேலும், விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகவும், வெளிநாட்டு விமான சேவை தொடங்கினால், கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.