மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பிலிருந்து தற்போது கருவாடுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாள்தோறும் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனைச் செய்ததுபோக, மீதமுள்ள மீன்களை கருவாடாக உலர வைத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடல்சார் உணவான கருவாடுக்கு மத்திய அரசு 5% ஜி.எஸ்.டி வரி விதித்திருந்தது. இதனை எதிர்பாராத வியாபாரிகள், அதிகளவில் விற்பனையாகும் மீன்களுக்கு ஜி.எஸ்.டி இல்லை என்றும், குறைந்த விலையில் விற்கப்படும் கருவாட்டிற்கு 5% வரி விதித்திருப்பது தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
கருவாடு ஏற்றி செல்லும் வாகனங்கள் ஜி.எஸ்.டி ரசீது பெறவில்லை என்றால் சுங்கச் சாவடி சோதனைகளில் பறிமுதல் செய்யப்படும் செயல்களும் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நடந்த ஜி.எஸ்.டி கூட்டத்தில் கருவாட்டிற்கு அளிக்கப்பட்டிருந்த 5% ஜி.எஸ்.டி முற்றிலும் நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பிரபல சந்தைகளில் கருவாடு இறக்குமதி அதிகரித்து, விற்பனையும் தொடங்கி உள்ளது.