செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக பட்ஜெட்டில் கூறியவை தேர்தல் நேரத்தில் செய்யக்கூடிய அறிவிப்பு திட்டங்களாக பார்க்கிறோம். விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலை ஆகிய மின் கட்டணம் உயர்ந்துள்ளது. அதேபோல சொத்து வரி, குடிநீர் வரி உயர்ந்திருக்கிறது, பத்திரப்பதிவு கைடு லைன் மதிப்பு உயர்த்தப்பட்டதால் எல்லா வகையிலும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். 4 ஆண்டு கால திமுக ஆட்சியின் மிகப்பெரிய பிரச்னைகளை மறைப்பதற்காக, மாற்று மாநில முதல்வர்கள், தலைவர்களை அழைத்து இப்படிப்பட்ட நாடகங்களை முதலமைச்சர் அரங்கேற்றியிருக்கிறார்.
தொகுதி மறு சீரமைப்பு நாடாளுமன்றத்தில் கேட்க வேண்டும். இதற்கு எதிராக திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆனால், அதில் காங்கிரஸ் எம்பிக்கள் கலந்து கொள்ளவில்லை.
சென்னையில் நேற்று தொகுதி மறு சீரமைப்பு ஆலோசனை கூட்டம் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வெவ்வேறு கட்சித் தலைவர்கள் அழைத்துப் பேசியுள்ளனர். இது திமுக ஆட்சியில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது, சட்டம் ஒழுங்கு சரி இல்லை, தமிழக மக்கள் மிகப்பெரிய கொந்தளிப்பில் உள்ளனர். இதை மடை மாற்றுவதற்காக நேற்றைய நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. அமலாக்கத்துறை மதுபான விற்பனையில் ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். நாங்கள் கூறியது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. அமலாக்கத்துறை எது எதில் ஊழல் நடந்துள்ளது என பட்டியலிட்டுள்ளனர். என்றவரிடம், சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டுமென பாஜக அழுத்தம் தருகிறது என கூறுகிறார்களே என்று கேட்டதற்கு பதிலளித்த அவர்... திருப்பித் திருப்பி நாங்கள் கூறிவிட்டோம் அதிமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்களாகவே கற்பனையில் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்லும் அவர்களை கட்சியில் சேர்க்க வாய்ப்பில்லை.
பாட்டாளி மக்கள் கட்சி, ராஜ்யசபா இடம் கேட்கப்பது உண்மையா?
இன்னும் ராஜ்ய சபா தேர்தல் பற்றி அறிவிக்கப்படவில்லை நீங்களே கற்பனையாக கேள்வி கேட்கிறீர்கள். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் கூறுகிறோம்.
வேல்முருகன் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கூறுகிறார்களே?
அவர் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரை அணுகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான் ஒரு நிலையான கூட்டணி பற்றி பேசுவோம். கொள்கை என்பது வேறு கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது நிலையானது கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பது. வாக்குகள் சிதறாமல் அதிக வாக்குகளை பெற வியூகம் அமைப்பது தான். கூட்டணி என்றும் நிலையானது இல்லை.
சுட்டிக் காட்டுகிறோம். குற்றம் சொல்வது கிடையாது:
ஒவ்வொரு கட்சியும் மக்கள் பிரச்னையை பேசுகிறார்கள். .திமுக கூட்டணியில் உள்ளவர்கள் மக்களின் பிரச்னை பற்றி ஏதும் கூறவில்லை. .எங்கு பார்த்தாலும் கொலை நடக்கிறது பாலியல் வன்கொடுமை நடக்கிறது விலைவாசி பற்றி பேசுகிறார்களா? நாங்கள் அரசின் மீது வேண்டுமென்றே குற்றம் சாட்டவில்லை. நடக்கும் சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறோம் இனி இது போன்ற கொலைகள் நடக்கக் கூடாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். குற்றம் சொல்வது கிடையாது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சருக்கு விருப்பமில்லை:
அதனால்தான் முதலமைச்சர் ஏதோ ஏதோ பேசுகிறார். திமுக 533 அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தனர் ஆனால் 15 அறிவிப்புகளை மட்டுமே நிறைவேற்றி உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார். ஆனால், ஏதும் செய்யவில்லை இதனால் தான் ஜாக்டோ ஜியோ போராடுகிறார்கள். அதிமுக கொண்டு வந்த பல திட்டங்களை நிறுத்தியது தான் திமுக அரசின் சாதனை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதலமைச்சருக்கு விருப்பமில்லை.
மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர அறிக்கைகள் கொடுத்து இருந்தனர் ஆட்சிக்கு வந்த பின்னர் அப்படியே பல்டி அடிப்பார்கள். அதிமுக, மக்களுக்கு எது நன்மையோ அதை செய்வோம். இதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அரசு என்பது மக்களை காக்கும் அரசாக இருக்க வேண்டும். என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.