தனியார் பேக்கரியில் உணவுப் பொருட்கள் வாங்கிக் கொண்டு பணம் தராமல் ஊழியர்களை பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி பேக்கரியை சூறையாடிய மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள லாலாபேட்டை பகுதியில் தனியார் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. பிள்ளாபாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் இந்தப் பேக்கரியை நடத்தி வருகிறார். குளித்தலையிலிருந்து கரூர் நோக்கி ஒரு காரில் வந்த ஐந்து பேர் இந்தப் பேக்கரிக்கு வந்து தண்ணீர் பாட்டில், பிஸ்கட், குளிர்பானங்கள் வாங்கியுள்ளனர். ஆனால் பொருட்களை வாங்கிக் கொண்டு அவர்கள் அதற்குப் பணம் தராமல் திரும்பி செல்ல முயற்சித்தனர்.
அப்போது வாங்கிய பொருட்களுக்கு பணம் கேட்ட ஊழியர்களை காரில் வந்தவர்கள் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி பேக்கரியில் உள்ள அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்துள்ளனர். இதையறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு வந்தபோது, அந்தக் கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து லாலாபேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஸ்கார்பியோ காரில் வந்தவர்கள் கரூரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் யார்? என்ன காரணத்திற்காக கடை உடைத்தனர் என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.