தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீரை சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் சேமிக்க கோரிக்கை

JustinDurai
செம்பரம்பாக்கம் ஏரியில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை அருகே உள்ள கல்குவாரியில் சேமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய பிரதான ஏரிகளில் செம்பரம்பாக்கம் எரியும் ஒன்று. இந்த ஏரியில் தென்மேற்குப் பருவமழை மற்றும் கிருஷ்ணா நதி நீரின் வரத்து காரணமாக சுமார் 75 சதவீத நீர் நிரம்பியது. இதன் தொடர்ச்சியாக தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரியின் கொள்ளளவு 85 சதவீதத்தை தாண்டியது. அதேபோல் ஏரியின் நீர்மட்டம் உயர்வான 24 அடியில் 22 அடியை எட்டியது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கடந்த ஏழாம் தேதி 500 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 500 கன அடியிலிருந்து 2 ஆயிரம் கனஅடியாக உபரி நீர் வெளியேற்றம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை அருகே இருக்கக்கூடிய கல்குவாரியில் சேகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செம்பரம்பாக்கம் அருகே இருக்கக்கூடிய சிக்கராயபுரம் கல்குவாரியில் கடந்த 2018, 19 களில் குடிநீர் எடுக்கப்பட்டது. அப்போது செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற முக்கிய ஏரிகள் வறட்சி அடைந்ததால் சிக்கராயபுரம் கல்குவாரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இதற்காக 30 கோடியில் பிரத்யேகமாக கல் குவாரியில் இருந்து ராட்சத குழாய்கள் , மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் கல் குவாரியில் இருந்து உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் கொண்டு சென்று, அங்கிருந்து சென்னைக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதனால் கல் குவாரியில் இருந்து நீர் வேகமாக தீர்ந்து போனது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் கணிசமான நீர் இருந்து வருவதால் கல் குவாரியில் இருந்து நீர் எடுப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டாலும் மீண்டும் தண்ணீரை சேகரிக்க கடந்த காலங்களில் முறையாக கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை. அமைக்கப்பட்ட ஒரு சில கால்வாய்களும் தற்போது முறையாக தூர்வாரப்படாததால் ஒரு சில தினங்களாக பெய்த கன மழையில் கூட கல்வாரிக்கு நீர்வரத்து இல்லாமல் தண்ணீர் இன்றி காட்சியளிக்கின்றன. எனவே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை கால்வாய் வழியாக கல்குவாரி கொண்டுவந்தால் ஏரிகள் வறட்சி ஏற்படும் கல் குவாரியில் இருந்து தண்ணீரை சேமிக்கலாம்.
அதேபோல் சிக்கராயபுரம் கல்குவாரியில் 30க்கும் மேற்பட்ட ராட்சத பள்ளங்கள் உள்ளது. இந்த பழங்கள் அனைத்தும் ஒன்றிணைத்து ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கினால் 1 அல்லது 2 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம் என கூறப்படுகிறது. எனவே கடந்த காலங்கள் போல் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கல்குவாரிக்கு தண்ணீரைக் கொண்டு வரும் கால்வாய்களை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, கல்குவாரி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரைக் கொண்டு செல்லும் திட்டம் உள்ளதாகவும் விரைவில் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.