அரசு மருந்தியல் கல்லூரிகளில் பேராசியர்கள் பற்றாக்குறை web
தமிழ்நாடு

10 ஆண்டுகளாக பேராசியர்கள் இல்லை.. பற்றாக்குறையால் தத்தளிக்கும் அரசு மருந்தியல் கல்லூரிகள்!

தமிழக அரசின் மருந்தியல் கல்லூரிகள் முழுநேர முதல்வர் இல்லாமலும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையாலும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இது குறித்து விரிவான செய்தியைப் பார்க்கலாம்.

PT WEB

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிகளில் மருந்தியல் படிப்புகளுக்கான தனிக் கல்லூரிகள் இயங்குகின்றன. இந்த மருந்தியல் கல்லூரிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை குறித்து இந்திய மருந்தாளுநர்கள் சங்கம் தமிழ்நாடு முதல்வருக்கு கடந்த மாதம் ஒரு புகார்க் கடிதத்தை அனுப்பியது. அதன்படி இந்த நான்கு கல்லூரிகளில் ஒன்றில்கூட முழுநேர முதல்வர் இல்லை. அந்தந்த மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களே மருந்தியல் கல்லூரிகளின் நிர்வாகத்தையும் கவனித்துக்கொள்கின்றனர்.

மொத்தமாக காலியாக உள்ள பணியிடங்கள்..

இந்த மருந்தியல் கல்லூரிகளில் மொத்தமாக உள்ள ஒன்பது பேராசிரியர் பணியிடங்களில் ஏழு இடங்களும் 18 இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 17 இடங்களும் காலியாக உள்ளன.

சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ள மருந்தியல் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட நான்கு பேராசிரியர் பணியிடங்களில் இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளன.

மதுரை மருந்தியல் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று பேராசிரியர் பணியிடங்களிலும் இரண்டு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கோவை, தஞ்சாவூர் மருந்தியல் கல்லூரிகளில் பேராசிரியர்களே இல்லை. ஆக, நான்கு அரசு மருந்தியல் கல்லூரிகளில் மொத்தமாக மூன்று பேராசிரியர்களும் ஒரு இணைப் பேராசிரியரும் மட்டுமே பணியாற்றுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் இந்த கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

மருந்தாளுநர்களின் முக்கியத்துவம் என்ன?

மருந்துகள் சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களே மருந்தாளுநர்கள். சரியான மருந்துகளை வழங்குதல், பக்க விளைவுகளை கண்காணித்தல், மற்றும் மருந்து பிழைகளை தடுப்பதன் மூலம் பொது சுகாதாரத்திற்கு அவர்கள் பெரிதும் உதவுகின்றனர். இதன் முக்கியத்துவம் கருதித்தான் தமிழ்நாட்டில் பி.ஃபார்ம், எம்.ஃபார்ம் உள்ளிட்ட மருந்தியல் பட்டப்படிப்புகள் மற்றும் பட்டையப் படிப்புகளுக்கென்று தனி கல்லூரிகளை அரசு உருவாக்கியது. ஆனால் ஒட்டுமொத்த மாநிலத்துக்கு நான்கு அரசு கல்லூரிகளே உள்ளன. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருந்தியல் கல்லூரிகள் எதுவும் புதிதாகத் திறக்கப்படவில்லை.

மறுபுறம் 110 தனியார் மருந்தியல் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் பத்து தனியார் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் ஆண்டுக்கு இரண்டு லட்ச ருபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை, நடுத்தர வர்க்க மாணவர்களுக்கு மருந்தியல் படிப்பு எட்டாக்கனி ஆகிக்கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு மருந்தியல் கல்லூரிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் விரைவாக நிரப்ப வேண்டும்; மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்; புதிய கல்லூரிகளை திறக்க வேண்டும் என்று மருத்துவ துறைசார் நிபுணர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் வலியுறுத்துகின்றனர்.