தமிழ்நாடு

“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்

“அமெரிக்காவில் ஆயிரம் சிலைகள் உள்ளன” - பொன்.மாணிக்கவேல் தகவல்

Rasus

தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சுமார் ஆயிரம் சிலைகள் அமெரிக்காவில் உள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோயிலில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் உள்ள அருங்காட்சியத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் மூ‌லம் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள சிலை மீட்கப்பட்டது. ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லிக்கு எடுத்து வரப்பட்ட சிலை, ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்தது. சிலைக்கு நெல்லை மாவட்ட கல்லிடைக்குறிச்சி மக்கள் மேளதாளம் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சுமார் ஆயிரம் சிலைகள் அமெரிக்காவில் உள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் பல சிலைகள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 1000 சிலைகள் உள்ளன. புகழ்பெற்ற செம்பியன்மாதேவி சிலையும் திருடப்பட்டுள்ளது. திருடப்பட்ட சிலைகளை மீட்க வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிலையின் மதிப்பும் ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும். அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிலைகள் சில இடங்களில் காட்சிப் பொருளாக வைக்கப்படுகின்றன. ஆனால் சிலைகள் அதற்கானது அல்ல. எனவே அந்த சிலைகளையும் மீட்டு மீண்டும் கோயில்களில் வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.