தமிழ்நாடு

கோடைக்கு முன்னரே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத்தீ!

கோடைக்கு முன்னரே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத்தீ!

webteam

கோடைக்காலம் தொடங்கும் முன்பாகவே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையடைய‌ச் செய்துள்ளது.

தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை என்பது, கேரளாவில் ஆரம்பித்து குஜராத் மாநிலம் வரை நீண்டு நெடியது. பல அரிய விலங்குகள், மரங்கள், பல்லாயிரக்க‌ணக்கான நீர்வீழ்ச்சிகள், ‌அணைகளை கொண்டுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையை உலக புராதன சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது.

(கோப்புப் படம்)

இந்த மலைகள் நீளும் இடங்களில் ஒன்றான தேனி மாவட்டத்தில் 33.6% காடுகள் உள்ளன. ‌இங்கு கூடலூர், மேகமலை, தேவாரம், போடிநாயக்கனூர், பெரியகுளம் பகுதிகளில் கோடைக்கு முன்பாகவே ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வருவது தேனி மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. காட்டுத்தீயின் காரணமாக, வனப்பகுதியில் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படுவதோடு, விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறுவதும் நிகழ்ந்து வருகிறது.

காட்டுத்தீயை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி தேனி மாவட்ட வன அலுவலர் கெளதமிடம் கேட்டபோது, தேனி மாவட்ட வனப்பகுதியில் 100 கிலோ மீட்டர் அளவிற்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக 40 தீத்தடுப்பு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். வனப்பகுதியில் தீ வைப்பவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் கூறினார்.