தமிழ்நாடு

அத்தியாவசிய தேவைக்காக வெளியே சென்று வந்தால் மஞ்சள் நீர் குளியல் - உஷாரான கிராமம்

webteam

கொரோனா தற்காப்பு நடவடிக்கையாக எண்டப்புளி கிராம மக்கள் மஞ்சள் கலந்த நீரை வீட்டு வாசல் மற்றும் தெருக்களில் தெளித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது எண்டப்புளி ஊராட்சி. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அக்கிராம மக்கள் ஒன்று கூடி அவர்களும் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எண்டப்புளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் வீடுகளில் காலையிலும் மாலையிலும் வேப்ப இலைகளை அரைத்து அத்துடன் மஞ்சள் கலந்த நீரை வீட்டு வாசல் மற்றும் தெருக்களில் தெளித்து வருகின்றனர்.

வீடுகளின் வாசலில் வேப்ப இலைகளை சொருகி வைத்தும் கொரோனா தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் இயற்கையில் நோய் தொற்று பரவலை தடுக்கும் சக்தி வேப்ப இலைக்கும் மஞ்சளுக்கும் உண்டு. அதனால் வேப்ப இலை, மஞ்சள் கலந்த கரைசலை வீடுகளில் தெளிக்கிறோம். குழந்தைகளை இந்தக் கரைசலை கொண்டு குளிக்க வைத்தும், அத்தியாவசிய பொருட்களை வாங்க சென்று வீட்டிற்கு வரும் நபர்கள் இந்த கரைசலில் குளித்த பின்பே தங்கள் வீடுகளுக்கு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த முறையை தங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் கடைபிடித்து வருவதாக எண்டப்புளி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.