தேனி மக்களவை எம்பி பார்த்திபனும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் இதுவரை 11 எம்பி-க்கள் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நேற்று வரை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று மேலும் 6 எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேலூர் தொகுதி எம்.பி செங்குட்டுவன், தூத்துக்குடி தொகுதி எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, பெரம்பலூர் தொகுதி எம்பி மருதராஜா ஆகியோர் சசிகலா தரப்பில் இருந்து விலகி பன்னீர்செல்வம் அணியில் இணைந்துள்ளனர். அதேபோல், விழுப்புரம் தொகுதி எம்பி ராஜேந்திரன், விழுப்புரத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் லெட்சுமணன் ஆகியோரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். பசுவமைவழிச்சாலையில் முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்த அவர்களை, பன்னீர்செல்வம் வரவேற்றார்.
இந்நிலையில், இரவு 9 மணியளவில் தேனி எம்.பி. பார்த்திபனும் நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் பன்னீர்செல்வம் அணியில் எம்.பிக்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன், நாமக்கல் எம்.பி சுந்தரம், கிருஷ்ணகிரி எம்.பி அசோக் குமார், திருப்பூர் எம்.பி சத்தியபாமா, திருவண்ணாமலை எம்.பி வனரோஜா ஆகியோர் ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.