தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ? - காவல்நிலையத்தில் மருத்துவக் கல்லூரி புகார்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் ? - காவல்நிலையத்தில் மருத்துவக் கல்லூரி புகார்

webteam

நீட் தேர்வில் மாணவர் ஆள்மாறாட்டம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி சார்பில் டீன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து ஒரு மாணவர் தேனி மருத்துவக் கல்லூரியில் படித்து வருவதாக புதிய தலைமுறை கள ஆய்வு செய்து பிரத்யேக செய்தியை வெளியிட்டது. இந்நிலையில், புதிய தலைமுறையிடம் பேசியுள்ள தேனி மருத்துவக் கல்லூரி டீன் ராஜேந்திரன், “ஆள்மாறாட்டம் தொடர்பாக இ-மெயில் மூலம் புகார் வந்தது. அதைக்கொண்டு மருத்துவத்துறை இயக்ககத்துக்கு அதுதொடர்பான ஆவணங்களை அனுப்பியுள்ளேன். புகார் வந்த தினம் முதலே மாணவர் கல்லூரிக்கு வரவில்லை. அத்துடன் காவல்நிலையத்தில் ஆள்மாறாட்டம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

முன்னதாக, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்று தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. மாணவரின் ஹால் டிக்கெட் புகைப்படமும், மாணவரின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நுழைவுத் தேர்வு எழுதியபோது ஆள்மாறாட்டம் நடந்ததா என சந்தேகம் எழுந்துள்ளது. புகாருக்குள்ளான மாணவர் சென்னையில் இருமுறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் புகைப்பட வேறுபாடு தொடர்பாக மாணவரின் தாயை தொடர்புகொண்டபோது, முரண்பட்ட தகவல்களை தெரிவித்திருக்கிறார்.