தமிழ்நாடு

தேனி: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் கனமழை – வராக நதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு

webteam

பெரியகுளம் வராக நிதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ என வேண்டாம் என பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் வராக நதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில், ஏற்கனவே உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பெரியகுளம் பகுதியில் உள்ள கல்லாறு, கும்பக்கரை ஆறு, செலும்பாறு உள்ளிட்ட ஆறுகளில் வரும் நீர் பெரியகுளம் வராக நதி ஆற்றில் கலந்து செல்வதால் அதிகாலை முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் வராக நதி ஆற்றங்கரையோர பகுதிகளான பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்களம், மேல்மங்கலம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வராக நதி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித் துறை மற்றும் வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.