தமிழ்நாடு

கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக  மாறிய தேனி

கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டமாக  மாறிய தேனி

webteam
தேனி மாவட்டம் ஒரு கொரோனா நோயாளிகளும் இல்லை என்ற நிலையை அடைந்துள்ளது. 
 
 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது  மக்களுக்குக் கவலையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாகச் சென்னையில் நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது கொரோனாவின் மையப்புள்ளியாகத் தலைநகர் மாறி வருகின்றதா என்ற ஐயம் மக்களுக்கு எழுந்துள்ளது.
 
 
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 161 பேரில், 138 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தலைநகரில் கடந்த 6 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்திருக்கின்றது. சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை சுமார் 50% என்ற அளவிலிருந்தாலும், தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறையாதது சென்னை மக்களுக்குக் கவலையை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாவட்டங்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கச் சென்னையில் தொற்று அதிகரித்துள்ளது.
 
 
இந்நிலையில்  கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக  தேனி மாறியுள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 43 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில் படிப்படியாகப் பலர் குணமடைந்த நிலையில் கடைசியாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஐந்து பேரும் இன்று முழுமையாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 17ஆம் தேதிக்குப் பிறகு யாருக்கும் நோய்த்தொற்று இல்லாததால் முழுமையாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தேனி  மாறியுள்ளது.