கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாகக் கூறி தேனியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அரசும் காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர், நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி சுகாதாரமற்ற நிலையில் இயங்கிவரும் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். தேனியில் நகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தபோது, சிட்கோ தொழிற்பேட்டையில் சுகாதாரமற்ற நிலையில் இயங்கி வரும் ஆவின் பாலகத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அதேபோல் கொசு உற்பத்தியாகக் காரணமாக இருந்ததாகக் கூறி பல நிறுவனங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஆவின் உள்ளிட்ட 9 நிறுவனங்களுக்கு ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுதொழில் உரிமையாளர்கள், பல ஆண்டுகளாக சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அபராதம் விதிப்பதாக கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.