தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பங்களாமேடு பாரஸ்ட் ரோட்டில் முதல் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த வீதி மூடப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் சீல் வைக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் 2 வது கொரோனா தொற்று அலை வீச துவங்கியதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பங்களாமேடு அருகே பாரஸ்ட் ரோடு முதல் பிரிவில் வசிக்கும் 37 வயதுடைய நபருக்கு கடந்த 11ஆம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தினர், அந்த குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 66 வயது உடைய அப்பா, 65 வயதுடைய அம்மா 10 வயது பேரக்குழந்தை ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட இருவரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து 37, 10 வயதுடைய இருவரும் வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் அந்த தெருவில் வசிக்கும் 18 குடும்பத்தினரும் வெளியே வராமல் இருக்க உத்தரவிட்டுள்ளது. பின்னர் வீடு, தெரு பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்த தெருவுக்குள் வெளியாட்கள் யாரும் சென்று வராமல் இருப்பதற்காக மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நகராட்சி நிர்வாகத்தால் எச்சரிக்கை போர்டும் வைக்கப்பட்டுள்ளது.