தேனி கனரா வங்கியில் நகைக் கடன் அடமான விவகாரத்தில் 1 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக இருவர் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
தேனியில் உள்ள கனரா வங்கியில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராகப் பணியாற்றி வந்தவர் செந்தில். இவர் பொதுமக்கள் அடகு வைத்த நகைகளின் கடன் தொகையை மாற்றி, போலி நகைகள் மூலம் போலியான பட்டியல் தயார் செய்து அதனை அடகு வைத்துள்ளார். இவ்வாறு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
இதை அறிந்த வங்கி மேலாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட வினோத் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அடகு வைத்த நகைகள் பறிபோனதோ என பொதுமக்கள் அச்சம் அடையத் தொடங்கினர். இதுதொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் தேனி கனரா வங்கி தலைமை மேலாளர் சுப்பையா கொடுத்த புகாரின் அடிப்படையில், நகை மதிப்பீட்டாளர் செந்தில் மற்றும் உடந்தையாக இருந்த வினோத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 120 (பி)- கூட்டு சதி, 406 - நம்பிக்கை மோசடி, 420 - பண மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து அவர்களிடம் சிபிஐ நேரடி விசாரணையை தொடங்கவுள்ளது.