Ramesh pt desk
தமிழ்நாடு

தேனி: தனியார் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை பிளேடால் கிழித்த கணவர் - அஞ்சி நடுங்கிய மாணவர்கள்!

மது போதையில் தனியார் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை அவரது கணவர் பிளேடால் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த பள்ளி குழந்தைகள் பயந்து நடுங்கி அலறினர்.

webteam

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் வு. கள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிரியங்கா என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், ஆசிரியர் பிரியங்கா, அவரது கணவர் ரமேஷ்வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.

police

இந்நிலையில், மது போதையில் பிரியங்கா பணிபுரியும் தனியார் பள்ளிக்குள் நுழைந்துள்ளார் ரமேஷ். அவர் வைத்திருந்த பிளேடால் மனைவி பிரியங்காவின் கழுத்து பின்பகுதி மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கிழித்துள்ளார். அப்போது அங்கே இருந்த சக பெண் ஆசிரியர் தடுக்க முற்பட்டபோது அவரையும் பிளேடால் தாக்கியுள்ளார். இதைக்கண்ட பள்ளி குழந்தைகள் அலறி அடித்து பள்ளி வகுப்பறைக்குள் அங்குமிங்கும் ஓடி கூச்சலிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவலை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர், ரமேஷை கைது செய்து பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயமடைந்த பிரியங்கா மற்றும் சக ஆசிரியர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் பள்ளி குழந்தைகளிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.