தமிழ்நாடு

திருச்சியில் குப்பைக் கூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளை -  சிசிடிவி 

webteam

திருச்சியில் மீண்டும் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுப்பட்டுள்ளது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. 


திருச்சி தாளக்குடியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பெண்களுக்கான தொழில் பயிற்சி மையம் இயங்கிவருகிறது. அங்கு 20 க்கும் மேற்பட்ட பெண்கள் தையற்கலையை பயின்று வருகின்றனர். நேற்று இரவு அந்த மைய கதவின் தாழ்பாளை உடைத்துக்கொண்டு  இரண்டு மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களது முகம் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராவில் தெளிவாக  பதிவானது. 

பின்னர் அங்கிருந்த தையல் இயந்திரங்களையும், செல்போன், லேப்டாப், கம்பியூட்டர் உள்ளிட்ட பொருள்களையும் கொள்ளையர்கள் நோட்டமிட்டுவதும் கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அப்போது அங்கே  கண்காணிப்புக் கேமரா இருப்பதை பார்த்த  கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். 

அதனைத் தொடர்ந்து வாசலில் வைக்கப்பட்டிருந்த குப்பை வாளியை, முகமூடியாக தலையில் மாட்டிக்கொண்டு கொள்ளையர்கள் மீண்டும் உள்ளே நுழைந்தனர். தொழில் பயிற்சி மையத்தில் இருந்த எந்தப் பொருளையும் சேதப்படுத்தாமல், அங்கிருந்த ₹2,500 ரூபாய் பணத்தை மட்டும் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.பணத்தை பறிகொடுத்த, தொழில்  பயிற்சி மையத்தின் நிர்வாகி ராஜேந்திரன்,சமயபுரம் டோல்கேட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.