தமிழ்நாடு

கும்பகோணத்தில் இருக்கும் கோயிலில் இருந்த ஐம்பொன் சிலைகள் திருட்டு

webteam

கும்பகோணம் அருகே உள்ள கோவிலில் இருந்து ஐம்பொன்னில் செய்யப்பட்ட சீனிவாச பெருமாள் சிலை திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

கும்பகோணம் அருகே திருபுறம்பியம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சீனிவாசப்பெருமாள் திருக்கோயில் ஒன்று உள்ளது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை ஜெயலட்சுமி என்பவர் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணிகளை நிறைவு செய்த ஜெயலட்சுமி கோயிலை பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் இன்று மாலை பூஜை செய்வதற்காக ஜெயலட்சுமி கோயிலுக்கு வந்துள்ளார். அப்போழுது அங்கிருந்த ஒன்றரை அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான சீனிவாச பெருமாள் சிலை , முக்கால் அடி உயரம் உள்ள பத்மாவதி தாயார் சிலை மற்றும் முக்கால் அடி உயரமுள்ள மற்றொரு சீனிவாச பெருமாள் சிலை ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் உடனடியாக சுவாமிமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் நாகலட்சுமி விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளுடன் கொள்ளையர்கள் அங்கிருந்த ஏணியை கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது மட்டுமல்லாமல் கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பானது 60 ஆயிரம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.