மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை போதைப்பொருளாக உபயோகிக்கும் இளைஞர்கள்.
ஹெராயின், கஞ்சா என சட்டவிரோத பொருட்களை மட்டுமே போதைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனைகளில் மட்டும் பயன்படுத்தப்படும் மருந்தை போதைக்காக உபயோகிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. கோவையில் கடந்த 20ஆம் தேதி காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தேகத்திற்கிடமான வகையில் பிடிபட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் இச்சம்பவம் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் பெரிய கும்பலாக திட்டமிட்டு இந்தக் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருவதும், இந்த மருந்துகள் குறித்து தெளிவான தகவலுடன், குறிப்புடன் செயல்படுவதும் மருத்துவர்களிடையே ஆச்சரியத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படுத்துவதற்காக வழங்கப்படும் ஒரு வகை மருந்தை குளூகோசில் நான்கு வையல்களை கலந்தால் அது போதை தரும் மருந்தாக மாறிவிடும். இதிலிருந்து, ஒரு சி.சி. எடுத்து 200 ரூபாய் விற்பனை செய்கின்றனர். இதன்மூலம், 500 மி.லி., குளூகோசுக்கு ரூ.50ஆயிரம் பெறுகின்றனர். வெளியாட்கள் வாங்க முடியாது என்பதாலும், நல்ல வருமானம் என்பதாலும், மருத்துவமனைகளில் குறிப்பாக பிரத்யேக உரிமம் பெற்ற மருத்துவமனைகள் மட்டுமே இதை வாங்கி பயன்படுத்துவதால் இந்தக் கும்பல் குறைந்த பாதுகாப்பு உள்ள தனியார் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறது என இந்திய மருத்துவ சங்கதின் மாவட்ட செயலாளர் ராஜேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
கோவையில் கடந்த 2ஆண்டுகளாக இந்தத் திருட்டு சம்பவம் நடந்தது தொடர்பாக மாநகர காவல்துறை ஆணையருக்கு நேரடியாக புகார் அளித்ததால் இந்தச் சம்பவம் அனைவரின் கவனத்தை பெற்றுள்ளது. மேலும், கோவை மட்டுமின்றி சென்னை, பெங்களூர், கேரளாவில் கொச்சின், திருச்சூர் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனையிலும் இந்தக் கும்பல் குற்றத்தில் ஈடுபட்டது தற்போது பிடிபட்ட 5 பேர் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மருந்தை தவறாகவோ, குறிப்பிட்ட அளவை விட அதிகமாகவோ பயன்படுத்தினால் மூளை பாதிப்பு உள்ளிட்ட உடல் ரீதயாக பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுத்தும். சமூகத்திற்கு கேடு விளைக்கும் இந்தக் கும்பலை அரசு தீவிரம் காட்டி பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.