கைது செய்யப்பட்ட நபரும், பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரியும்
கைது செய்யப்பட்ட நபரும், பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரியும் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சென்னை | இளநீர் ஏற்றி வந்த மினி லாரி திருட்டு.. 1.30 மணி நேரத்தில் குற்றவாளி கைது.. வாகனம் பறிமுதல்!

PT WEB

செய்தியாளர் - அன்பரசன்

கர்நாடகவை சேர்ந்த ஜெகதீஷ் (45) என்ற வாகன ஓட்டுநர் கர்நாடகாவில் இருந்து இளநீர் லோடு எடுத்துக்கொண்டு கடந்த 23ஆம் தேதி சென்னை வந்திருக்கிறார். சென்னையின் பல்வேறு பகுதிகளில் இளநீர் சப்ளை செய்துவிட்டு நேற்று இரவு கோயம்பேடு 100 அடி சாலையில் வண்டியை நிறுத்திய அவர், சாவியை லோடு லாரியில் வைத்துவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார்.

திருடு போன லோடு லாரி

டீ குடித்துவிட்டு ஜெகதீஷ் வந்து பார்த்தபோது, தனது லோடு லாரி திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக அவர் இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் உடனடியாக வாக்கி டாக்கி மூலம் இரவு பணி காவலர்கள் அலெர்ட் செய்தனர்.

இந்த நிலையில் அடுத்த 1.30 மணி நேரத்துக்குள் கொரட்டூர் அல்லியன்ஸ் அப்பார்ட்மெண்ட் அருகே வாகன சோதனையில் திருடப்பட்ட வாகனம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொரட்டூர் போலீசார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்தனர். மேலும், வாகனத்தை திருடி வந்த நபரையும் கைது செய்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை பறிமுதல் செய்து, திருடனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கைதானவர் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் முத்து (38) என்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட அருள்முத்து

கைது செய்யப்பட்ட அருள் முத்துவிடம் கோயம்பேடு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு 12 மணிக்கு திருடப்பட்ட லோடு லாரியை நள்ளிரவு 1.30 மணி அளவில் போலீசார் மீட்ட சம்பவம், பாராட்டை பெற்று வருகிறது.