கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட பிரசார சுற்றுப்பயண நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகளிடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபக்திரகாளியம்மன் கோவிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சுற்றுப்பயணத்தை துவங்கினார். இன்று முதல் வரும் 21ம் தேதி வரை கட்சி ரீதியாக, 21 மாவட்டங்களை உள்ளடக்கிய சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை தேக்கம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் சூளை உரிமையாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி கலந்துரையாடினார்.
அப்போது நிகழ்ச்சிக்காக வந்த அதிமுக நிர்வாகிகள் வெளியே காத்திருந்தனர். அதில் அரங்குக்கு வெளியே நின்றுகொண்டிருந்த தேக்கம்பட்டி முன்னாள் ஊராட்சி துணைத் தலைவரும், அதிமுக ஒன்றிய பொருளாளருமான தங்கராஜ் என்பவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் திருடப்பட்டுள்ளது. பேன்ட் பாக்கெட்டில் ப்ளேடு போட்ட மர்ம நபர், மொத்தமாக பிக்பாக்கெட் அடித்து சென்றுள்ளார்.
இதே போல மற்றொரு அதிமுக நிர்வாகியான ஆனந்த் என்பவரிடம் ரூபாய் 1 லட்சம் ரூபாய் மற்றும் அபு என்பவரிடம் 2,500 ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் பிக்பாக்கெட் அடித்துச் சென்ற நிலையில், புகாரை பெற்றுக்கொண்ட மேட்டுபாளையம் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப் பயணத்திற்கு வந்த அதிமுக நிர்வாகிகளிடம், பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.